கோவை: ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் !

X
கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட ஏழு வனச்சரகங்களிலும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் பணியில் 126 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று நேரடி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 42 நேர்கோட்டுப் பாதைகளில் களப்பணியாளர்கள் யானைகளின் நடமாட்டம், எண்ணிக்கை குறித்து துல்லியமாகப் பதிவு செய்தனர். இன்று மறைமுக கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவுள்ளன. யானைகளின் எச்சம், கால் தடங்கள் போன்ற மறைமுக அறிகுறிகளைக் கொண்டு அவற்றின் இருப்பு மற்றும் நடமாட்டம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பின் இறுதி நாளான மே 25, 2025 அன்று வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது யானைகளின் நீர் ஆதார பயன்பாடு மற்றும் திறந்தவெளி நடமாட்டம் குறித்த முக்கிய தகவல்களை அளிக்கும். இந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு மூலம் கோவை வனக்கோட்டத்தில் உள்ள யானைகளின் தற்போதைய எண்ணிக்கை, அவற்றின் வாழ்விடப் பயன்பாடு மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான தரவுகள் கிடைக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story

