கோவை: குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைப்பு- குடிநீர் வீண்

X
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானதுடன், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மதியம், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே, சாமண்ணா நீரூந்து நிலையத்தில் இருந்து நீர் உறிஞ்சப்பட்டு திருப்பூர் மாநகராட்சிக்கு மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி வழியாக குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பினால், பல அடி உயரத்திற்கு குடிநீர் அருவி போல கொட்டியது. இதனால் நடூர் பாலம் முழுவதும் குடிநீரால் நிரம்பியது. இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, அருவி போல கொட்டும் தண்ணீரை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். குழாய் உடைப்பால் பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக சென்றது. இதுகுறித்து அறிந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்ட அதிகாரிகள் விரைந்து வந்து குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story

