சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
X
பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
இந்தியா முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் முக்கிய ரெயில் நிலையங்களை தேர்வு செய்து அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நுழைவு வாயிலை அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. ரெயில் நிலைய ஒரு பகுதியில் அதாவது, 2-வது நுழைவு வாயில் முன்பு மேற்கூரையின் உட்பகுதியில் பால்சீலிங் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளி காற்றால் இந்த பால்சீலிங் அதாவது மேற்கூரையின் உட்பகுதி திடீரென பெயர்ந்து பயங்கர சத்தத்துடன் விழுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் என்ன நடக்கிறது என்பதை கூட யூகிக்க முடியாத வகையில் அங்கும், இங்கும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கட்டிடமே இடிந்து விழுவது போன்று சிலர் அலறியபடி சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயம் இல்லாமல் தப்பினர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த பகுதிக்கு யாரும் செல்லாதவாறு தடை விதித்தனர். தொடர்ந்து பெயர்ந்து விழுந்த மேற்கூரையை அகற்றும் பணி நடந்தது. மாலை நேரம் என்பதால் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கூரை பெயர்ந்து விழுந்தது தொடர்பாக ரெயில் நிலைய கட்டுமான பணிகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story