கோவை: கள்ளச்சந்தை ரயில் டிக்கெட் விற்பனை- ஒருவர் கைது

கோவை: கள்ளச்சந்தை ரயில் டிக்கெட் விற்பனை- ஒருவர் கைது
X
ரயில் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்று வந்த அப்துல் ஹக்கீம் ஷேக் என்பவர் கைது.
போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் போத்தனூர் ரயில் நிலைய முன்பதிவு மையத்தில் நடத்திய திடீர் சோதனையில், ரயில் டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்று வந்த அப்துல் ஹக்கீம் ஷேக் (37) என்பவரை கைது செய்தனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், கோவையில் வசித்து வருகிறார். சோதனையின் போது அவரிடமிருந்து 26230 ரூபாய் ரொக்கம், முன்பதிவு செய்யப்பட்ட 3 ரயில் டிக்கெட்டுகள் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு படிவங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவரது செல்போனில் 85000 ரூபாய் மதிப்புள்ள காலாவதியான முன்பதிவு டிக்கெட்டுகளின் புகைப்படங்களும் கண்டெடுக்கப்பட்டன. ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அப்துல் ஹக்கீம் போத்தனூர், கோவை, வடகோவை, பீளமேடு, மேட்டுப்பாளையம் மற்றும் பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலம் ஆகிய ரயில் நிலையங்களில் மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது. வடமாநில தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு, ஒருவரது அடையாள அட்டையைப் பயன்படுத்தி மொத்தமாக டிக்கெட்டுகளைப் பெற்று இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்துல் ஹக்கீம் மீது போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
Next Story