வாழக்கரையில் புதிதாக அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வாழக்கரை ஊராட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.பக்கிரிசாமி தலைமை வகித்தார். கட்சியின் கிளை செயலாளர் டி.சந்திரகாசன், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் கட்சிக் கொடியேற்றி வைத்து மாநாடு குறித்து விளக்கி பேசினார். சிறப்பு விருந்தினராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கே.பாஸ்கர் எதிர்கால பணிகள் குறித்து விளக்கி பேசினார். மாநாட்டில், புதிய கிளை செயலாளராக எஸ்.தினேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.2025-ம் ஆண்டுகான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின், 100 நாள் வேலைத்திட்ட பணியை தொடங்கிட வலியுறுத்தி, வருகிற ஜூன் 2-ம் தேதி கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது, வாழக்கரையில் புதிதாக அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்க கேட்டு கொள்வது, வாழக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணினி ஆப்ரேட்டர் பணியினை உள்ளூரை சேர்ந்த படித்த நபருக்கு வழங்க கேட்டு கொள்வது, வாழக்கரை- தெற்குவெளி கிராமத்தை இணைக்கும் மண் சாலையை கப்பி சாலையாக மாற்ற வேண்டும். வடமலை சேத்தி மற்றும் கீழவாழக்கரை மயானத்திற்கு தார் சாலை, புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் தர்மன் சாலைக்கு தெருவிளக்கு அமைத்து தர கேட்டு கொள்வது, ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, தேவையான தரை தளம் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்து தர கேட்டு கொள்வது, தமிழக அரசு காலணி என்ற பெயர் இருக்கக்கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், வாழக்கரை ஊராட்சியில் காலணி தெரு என புழக்கத்தில் உள்ள பெயரை கணபதி தெரு என பெயர் மாற்றம் செய்ய கேட்டு கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில், மாவட்ட குழு உறுப்பினர் வீ.சுப்பிரமணியன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

