ராஜபாளையத்தில் கோயில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரே பிரிவை சேர்ந்த இரண்டு தரப்பினர் மோதிக்கொண்ட காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கோயில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரே பிரிவை சேர்ந்த இரண்டு தரப்பினர் மோதிக்கொண்ட காட்சிகள் வைரல் ஆகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டியில் புதுக்குடி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக அரசு அனுமதி இன்றி திருவிழா நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிலருக்கு அம்மை நோய் தாக்கியதன் காரணமாக இந்த வருடம் திருவிழா நடத்த அப்பகுதியினர் அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். திருவிழா நடத்த அதே பிரிவை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இன்று காலை 9 மணிக்கு சமாதான கூட்டம் மூலம் முடிவு செய்யலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோயில் பூட்டப்பட்டு சாவியை வருவாய் துறையினர் எடுத்துச் சென்றனர். சமாதான கூட்டம் முடிந்த பின் திருவிழா நடத்துவதற்காக ஒரு தரப்பினர் கோயில் முன் பந்தல் போட்டு, மின்விளக்கு கட்டியிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் வந்த எதிர் தரப்பினர் அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அங்கிருந்த விளக்குகள் உடைக்கப்பட்ட நிலையில் சிலருக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த அளிக்கப்பட்ட புகாருக்கு தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட செல்போன் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
Next Story

