குடிபோதையில் தகராறு அண்ணனை கொலை செய்த தம்பி

X
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரியில் வீட்டில் குடிபோதையில் வந்து அடிக்கடி தகராறு செய்த அண்ணனை கொலை செய்து செப்டிக் டேங்கில் போட்டுவிட்டு தம்பி காவல்நிலையத்தில் சரணடைந்தார். திருவையாறு அருகே நடுக்காவேரி அரசமரத் தெருவை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் அஜித்குமார் (27) டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கு தம்பி ராம்குமார் (25) (டூ-வீலர் மெக்கானிக்) மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர். ஒருவருக்கு திருமணமாகி விட்டது. அப்பா இறந்து விட்டார். அம்மா விஜயாவுடன் இளைய தங்கை திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அஜித்குமார் வேலை எதுவும் இல்லாமல் இருந்து வரும் நிலையில், குடி போதையில் வந்து வீட்டில் தகராறு செய்வது என்று பொறுப்பில்லாமல் இருந்து வந்ததால் அண்ணனை தம்பி ராம்குமார் கண்டித்து வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவும் இது தொடர்பாக அண்ணணை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், தம்பி ராம்குமார் மன அழுத்தம் ஏற்பட்டு ஆத்திரத்தில் அண்ணன் அஜித்குமாரை அடித்து கீழே தள்ளியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்து இறந்தார். இறந்த அஜித்குமார் உடலை வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் போட்டுவிட்டு வெள்ளிக்கிழமை காலை நடுக்காவேரி காவல்நிலையத்தில் அண்ணனை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு, ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் முகம்மது நிவாஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அஜித்குமார் உடலை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து ராம்குமாரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தடய அறிவியல் நிபுணர் ராமச்சந்திரன், கைரேகை நிபுணர் மோகன்தாஸ் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர்.
Next Story

