பெண்களின் முன்னேற்றத்தில் சிறந்த பங்களிப்பு: சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

X
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 25-ந் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2025-ம் ஆண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தினவிழாவின்போது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழும், சிறந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. சமூக பணியில் ஈடுபடும் இளைய தலைமுறையினருக்கு ஆர்வமூட்டுதல், சமூக சேவையாளர்களின் சவாலான பணியை அங்கீகரித்தல், சமூக பராமரிப்பில் பன்முகத்தன்மை மற்றும் சமவாய்ப்பினை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டிற்கான ‘சமூக சேவகர் விருது மற்றும் பெண்களுக்கான சேவை நிறுவன விருது’ குறித்த அறிவிப்பு https://awards.tn.gov.in என்ற அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளைப் பெற தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருதிற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் தொண்டாற்றி இருக்க வேண்டும். இத்தகைய சமூக சேவகர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். விருது பெற இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை அணுகி வரும் 25.6.2025-க்குள் தங்களது கருத்துருக்களை ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் விருதுகள் இணையதள பக்கத்தில் https://awards.tn.gov.in விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story

