திருமருகல் ஒன்றியத்தில் கனமழை காரணமாக

100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பாதிப்பு
நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக, திருமருகல் ஒன்றியத்தில் உட்பட பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பருத்திச் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பருத்தி பயிரிட்டு 70 முதல் 90 நாட்கள் வயதுடைய பருத்திச் செடிகளாக உள்ளது. முதல் சுற்று பருத்தி காய்கள் வெளிவந்து இன்னும் சில நாட்களில் பஞ்சு எடுக்கும் நிலைக்கு வந்த பருத்தி செடிகள், பலத்த காற்றில் பருத்தி காய்கள் கொட்டி விட்டன. குறிப்பாக, பருத்திச் செடிகள் பல இடங்களில் வேரோடு சாய்ந்துள்ளது. திருமருகல், சியாத்தமங்கை, விற்குடி, வாழ்குடி, திருச்செங்காட்டங்குடி, காரையூர், திருப்பயத்தங்குடி, திருக்கண்ணபுரம், ஆலத்தூர், சேஷமூலை, இடையத்தங்குடி, திருப்புகலூர், வவ்வாலடி, அம்பல், பொறக்குடி, ஏர்வாடி, எரவாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், மருங்கூர், தென்பிடாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செடிகள் வேரோடு சாய்ந்து காய்கள் உதிர்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பெய்த மழையில், பருத்தி வயல்களில் தண்ணீர் சூழ்ந்து பருத்திச் செடிகள் அழுகி இருந்தன. எனவே, தண்ணீரை வடிய வைத்து உரம் வைத்து பாதுகாத்தோம். அத்தகைய இடர்பாட்டில் தப்பி பிழைத்த பருத்தி செடிகளில் இருந்து முதல் சுற்று பஞ்சு எடுக்க வேண்டிய நிலையில், பலத்த காற்று அடித்து மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஏற்கனவே, மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி செடி குறித்த கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்நிலையில், இரண்டாவது முறையாக பலத்த காற்று அடித்து பருத்திச் செடிகள் முழுமையான சேதமடைந்துள்ளன. எனவே, இது குறித்த கணக்கெடுப்பை நடத்தி, தமிழக அரசு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story