வைகை அணையில் மதகுகளை இயக்கி சோதனை
தேனி மாவட்டத்தில் வழக்கத்திற்கு முன்பாகவே தொடங்கிய தென்மேற்கு பருவமழை... வைகை அணையில் இருந்து அடுத்த மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு... அணையின் மதகுகளை இயக்கி சோதனை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை வழக்கத்திற்கு முன்பாகவே பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கான நீர் வரத்து அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த மாதம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக இன்று வைகை அணையில் உள்ள மதகுகளை இயக்கி பார்த்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதகுகள் பராமரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது தவிர மதகுகளை இயக்க ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைக்கும் விதமாக பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் வைகை அணைக்கான நீர்வரத்து, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை ஆகியவற்றை 24 நேரமும் கண்காணிக்க பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story




