நீரேற்று நிலையம் அமைக்க இடம் ஆய்வு செய்த நகராட்சி தலைவர்

நீரேற்று நிலையம் அமைக்க இடம் ஆய்வு செய்த நகராட்சி தலைவர்
X
குமாரபாளையத்தில் நீரேற்று நிலையம் அமைக்க இடம் நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் நகராட்சி குடிநீர் விநியோக பணிக்கு 15.50 கோடி மதிப்பீட்டில் புதிய நீரேற்று நிலையம் அமைக்கும் இடத்தில் நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார். குமாரபாளையம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு தற்போது காவேரி நகர் பத்ரகாளியம்மன் கோவில் ஆற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோடைகாலங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குடிநீர் வினியோகம் செய்யும் பணி சிறிது பாதிப்பு அடைகிறது. மேலும் தற்போது நீர் உறிஞ்சும் இடத்தில் சாயக்கழிவு நீர் அதிகம் கலப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது நீர் உறிஞ்சும் இடத்தை எப்பொழுதும் காவேரி ஆற்றில் தண்ணீர் வற்றாத நிலையில் உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் மாற்றம் செய்து, அங்கிருந்து காவேரி நகர் தலைமை சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கு திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன் பேரில் மேற்கண்ட பணிக்கு 15.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குமாரபாளையம் நகர மக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி தூய்மையாக கிடைக்கவும் வழிவகை ஏற்படும்.புள்ளாக்கவுண்டம்பட்டியில் புதியதாக நீரேற்று நிலையம் அமைக்கப்படும் இடத்தை குமாரபாளையம் நகராட்சி தலைவர், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் சரவணன், நகரமன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஐயப்பன், வடக்கு நகர இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story