பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர், சிறுவன் உயிரிழப்பு 

விபத்து
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்ற விபத்தில் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரெத்தினம் மகன் சிவராமன் (வயது 29) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதே ஊரில் இ சேவை மையம் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான ராஜசேகரன் என்பவர் மகனான, ஆயிங்குடி அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும்,  அறிவுக்கரசு (வயது 11) என்பவருடன், பேராவூரணி சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்கி விட்டு, பல்சர் மோட்டார் சைக்கிளில் அரசு மருத்துவமனை எதிரில்  சாலையைக் கடக்க முயன்ற போது, சாலையில் மறுபுறத்தில் வந்த லாரியின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலையும் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இறந்த இருவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது பார்த்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து ஏற்றி வந்த உர மூட்டைகளை பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியில் இறக்கி விட்டு, காலி லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழசிறுபூர் கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா என்பவர் மகன் லாரி ஓட்டுநர் சதீஷ் கண்ணன் (வயது 23) என்பவரை காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
Next Story