பெற்ற மனுக்களை பேருந்து பயணத்திலேயே படித்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: தமிழ்நாட்டில் கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளது -

பெற்ற மனுக்களை பேருந்து பயணத்திலேயே படித்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: தமிழ்நாட்டில் கோடை மழையால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள மின்துறை தயாராக உள்ளதாக அரியலூரில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரியலூர், மே.26- அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 புதிய வழித்தடங்களில் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அரியலூர் - திருமானூர், அரியலூர் - பொய்யூர், அரியலூர் - அஸ்தினாபுரம், அரியலூர் - கல்லக்குடி உள்பட 6 வழித்தடத்தில் பேருந்துகளை துவங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர், தான் தொடங்கி வைத்த பேருந்திலேயே திருமானூர் வரை  அமர்ந்து பயணம் மேற்கொண்டார்.  அப்போது கீழப்பழுவூரில் விழாவிற்கு வருகை தந்த பொழுது காரில் இருந்து இறங்கியவுடன் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை சேகரித்து, பேருந்தில் பயணம் செய்யும்பொழுது அவற்றைப் படித்துப் பார்த்து ஆய்வு மேற்கொண்டார். உடன் பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் அமைச்சர்கள் மனு வாங்கினால் எங்கே செல்லும் என்று தெரியாத நிலையில், வாங்கிய மனுக்களை உடனே பேருந்து பயணத்தின்போது படித்துப் பார்த்த அமைச்சர் சிவசங்கரின் செயலால் மக்கள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோடை மழையும் பெய்து வருகிறது. கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள அத்தியாவசிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். தற்போது சில இடங்களில் சூறைக்காற்றால் மின்கம்பிகள் கீழே சாய்ந்து வருகிறது. அவற்றை உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தேவையான மின்கம்பங்கள் போதிய அளவு கையிருப்பு உள்ளதாகவும், மின்வாரிய ஊழியர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.புதுடில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று நிதி உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமைக்குரல்களை எழுப்பியுள்ளார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். டெல்லி சென்று உரிமைக்குரல் எழுப்பி நிதியை கேட்கும் முதல்வரின் செயலை மற்ற முதல்வர்களும் வியந்து பார்க்கின்றனர். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த சான்றாகும். எடப்பாடி பழனிச்சாமியை போன்று அடிமை ஆட்சி நடத்திடவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக மகளிர் விடியல் பயணத்துக்கான கையெழுத்தை முதலமைச்சர் ஸ்டாலின் போட்டார். தற்போது 700 கோடி முறை தமிழக முழுவதும் மகளிர் விடியல் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இது இந்தியாவின் வேறெந்த மாநிலங்களிலும் நடைபெறாத ஒரு புரட்சித் திட்டம். மாநில திட்டக்குழு ஆய்வின் படி ஒரு மகளிர்க்கு சராசரியாக 888 ரூபாய் மாதந்தோறும் சேமிப்பு கிடைக்கிறது என புள்ளி விவரம் தெரிவிக்கிறது என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story