சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் தனித்தனி கடைகளாக ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு

X
சேலம் சின்னக்கடை வீதியில் வ.உ.சி. தினசரி பூ மார்க்கெட் உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தால் 75 ஆண்டுகளுக்கு மேலாக பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. 2020-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு அங்கு கடைகள் வைத்திருந்த பூ வியாபாரிகள் போஸ் மைதானத்திற்கு சென்று பூ வியாபாரம் செய்து வந்தனர். அதன்பிறகு மீண்டும் தினசரி மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் ஏற்கனவே கடைகளை நடத்தி வந்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யாமல் வேறு சிலருக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சேலம் வ.உ.சி. மார்க்கெட் தினசரி பூ வியாபாரிகள் நேற்று சங்க தலைவர் வெங்கடேசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பூ வியாபாரிகளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் வ.உ.சி. தினசரி பூ மார்க்கெட்டில் ஐகோர்ட்டு உத்தரவை மீறி வர்த்தக நோக்கத்தில் மாநகராட்சியால் தனித்தனி கடைகளாக ஏலம் விடும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இதனால் அதனை தடுத்து நிறுத்தம் செய்ய வேண்டும் எனக்கூறி மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர். பின்னர் நிர்வாகிகளை மட்டும் போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர்.
Next Story

