கோவை: மழையால் சேறும் சகதியுமாய் மாறிய மார்க்கெட் !

கடந்த மூன்று நாட்களாக கனமழை கொட்டி தீர்த்ததால் கோவை மாவட்டத்தில் உள்ள, எம்ஜிஆர் மார்க்கெட் பகுதி சேறும் சகதியுமாய் காட்சியளிக்கிறது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட், கடந்த 15 ஆண்டுகளாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் காய்கறிகள் விநியோகிக்கும் முக்கிய மையமாகத் திகழ்கிறது. 100-க்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கும் இந்த மார்க்கெட், தற்போது மழைக்காலங்களில் சேறும் சகதியுமாய் மாறி, வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தி வருகிறது. மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் வடிகால் வசதி மற்றும் மழைக்கான தடுப்பு சீட்கள் இல்லாததால், மழை பெய்யும்போதெல்லாம் தண்ணீர் தேங்கி, வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாய் காட்சியளிக்கிறது. இதனால் காய்கறிகளை ஏற்றி இறக்கும் வாகனங்கள் சேற்றில் சிக்குவதுடன், தொழிலாளர்கள் சேற்றுப்புண்ணால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், தற்காலிக சீரமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்வதாகவும், நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை என்றும் வியாபாரிகள் குமுறுகின்றனர். எனவே, மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அவர்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story