சுற்றுலா பயணியை தாக்கிய மூன்று பேர் கைது

சுற்றுலா பயணியை தாக்கிய மூன்று பேர் கைது
X
கொடைக்கானலில் தங்களது கடையில் பொருட்கள் வாங்காத ஆத்திரத்தில் சுற்றுலா பயணியின் காரை உடைத்த கடை உரிமையாளர் உட்பட 3பேர் கைது. சுற்றுலாப் பயணிகளை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி மதுமதி எச்சரிக்கை
திருச்சி மணிமண்டபத்தைச் சேர்ந்த மனோ சித்தார்த்தன் இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணி செய்து வருகிறார் .கடந்த 23ஆம் தேதி மனோ சித்தார்த்தன் இவரது மனைவி மீனா இவரது மகன் விதுரன் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா முடித்துவிட்டு திருச்சிக்கு திரும்பிச் சென்றுள்ளனர் . அப்போது பழனி பிரிவு பெருமாள் மலை அருகே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்று பழங்கள் வாங்கி உள்ளனர். அப்போது இவர்கள் காரை நிறுத்தி இருந்த சாலையின் அருகே ஸ்பைசஸ் கடையை சேர்ந்தவர்கள் இவரது வாகனத்தை வேறு இடத்தில் நிறுத்தச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர். மனோ சித்தார்த்தன் பழங்களை வாங்கி விட்டு இவரது காரை தாமதமாக எடுத்து உள்ளார். தங்களது கடையில் பொருட்கள் வாங்காமல் வேறு கடையில் பொருட்கள் வாங்குவதற்காக தங்களது கடை வாசலில் முன்பு நிறுத்தி தாமதமாக வாகனத்தை எடுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த அந்த ஸ்பைசஸ் கடையின் உரிமையாளர் உட்பட மூவர் மனோ சித்தார்த்தனை தாக்குவதற்கு முற்பட்டு உள்ளனர். இவர் உடனடியாக தனது காரை வேகமாக செலுத்தியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த இவர்கள் இவரது காரை பின் தொடர்ந்து வந்ததுடன் பெருமாள் மலை அருகே வழிமறித்து இவரது காரை தாக்கி உள்ளனர் . இவரையும் இவரது மனைவியையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன் கார் கண்ணாடியையும் உடைத்து உள்ளனர். செய்வது அறியாது திகைத்த மனோ சித்தார்த்தன் மற்றும் இவரது மனைவி மிகுந்த பதற்றத்துடன் மீண்டும் கொடைக்கானலுக்கு திரும்பி உள்ளனர். பின்னர் இது பற்றி கொடைக்கானல் போலீசில் புகார் செய்தனர். கொடைக்கானல் போலீசார் சிசிடிவி காட்சிகள், உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து திருச்சி சுற்றுலாப் பயணி மனோ சித்தார்த்தன் மற்றும் இவரது காரை தாக்கிய பெருமாள் மலை பழனி பிரிவு அருகே ஸ்பைசஸ் கடை நடத்தி வரும் பெருமாள் மலையைச் சேர்ந்த முகமது அலி மகன் முஹம்மது அயூப்கான் 35, மற்றும் இவரது கடையில் பணி புரியும் அடுக்கம் சாமக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் முத்துராமலிங்கம் 18, இதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சிரஞ்சீவி 18, ஆகிய மூவரையும் கைது செய்தனர். சுற்றுலாப் பயணி மனோ சித்தார்த்தனின் காரை வழி மறித்து அவர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை அடுத்து இது பற்றி கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி மதுமதி கூறியதாவது. சுற்றுலாப் பயணிகளை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு புதியவர்கள் . அவர்களுக்கு எங்கு வாகனங்கள் நிறுத்த வேண்டும் நிறுத்தக்கூடாது என்பது பற்றி அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் வியாபாரிகள் தான் கூற வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி நடந்தால் அது பற்றி கொடைக்கானல் போலீசிற்கு தகவல் தர வேண்டுமே தவிர அவர்களை தாக்குவது அல்லது அச்சுறுத்த அச்சுறுத்தவோ கூடாது. அப்படி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகளும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த கொடைக்கானல் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். பல முக்கிய இடங்களில் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள ஏதுவாக கியூ ஆர் கோடு வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
Next Story