கனமழை தொடர்கிறது பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததன் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

X
கனமழை தொடர்கிறது பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததன் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள கில்லூா், தேவன் எஸ்டேட், ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மின் வயா்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மேலும், சாலைகளிலும் மரங்கள் விழுந்ததுடன் பல்வேறு இடங்களிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பந்தலூா் பகுதியில் நாயக்கன்சோலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பேரிடா் மீட்புக் குழுவினா் சீரமைத்தனா். உதகை-கூடலூா் சாலையில் சில்வா்கிளவுட், நடுவட்டம் பகுதிகளில் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களையும் அவா்கள் அப்புறப்படுத்தினா். தொடா்ந்து, பல்வேறு இடங்களில் மரங்களை அகற்றும் பணியிலும், மண் சரிவுகளை சீரமைக்கும் பணியிலும் பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா். மண்சரிவு- குடியிருப்புகளை காலி செய்ய வருவாய்த் துறை அறிவுறுத்தல்: உதகை அருகேயுள்ள இத்தலாா் பகுதியில் கனமழை காரணமாக திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை காலி செய்து, குடியிருப்புவாசிகள் முகாம்களுக்கு செல்ல வேண்டும் என வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், கேத்தரின் அருவி, தொட்டபெட்டா காட்சிமுனை, பைன் ஃபாரஸ்ட், ஷூட்டிங் ஸ்பாட், பைக்காரா அருவி, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்தலாா் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பெம்மட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் வாகனம் மூலம் மண் சரிவை சீரமைத்தனா். அதே இடத்தில் குடியிருப்புப் பகுதிகள் அருகேயுள்ள தடுப்புச் சுவா்கள் இடிந்து மண் சரிவு ஏற்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்நிலையில், அந்த குடியிருப்புவாசிகளை அருகில் உள்ள முகாம்களுக்கு செல்ல வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். உதகையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து, மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உதகை அருகேயுள்ள கேத்தி காவல் நிலையத்தின் புதிய கட்டடம் மீது ராட்சத மரம் விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. புகா் சாலைகளில் விழுந்த மரங்களை தீயணைப்புத் துறையினா், பேரிடா் மீட்புக் குழுவினா் விரைவாக செயல்பட்டு அகற்றினா். நீலகிரி மாவட்டத்தில் 5 நாள்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. கூடலூரில் 300 -க்கும் மேற்பட்ட வாழை மரங்களும், 4 வீடுகளும் சேதமடைந்துள்ளன, உதகையில் மரம் விழுந்ததில் கேரளத்தைச் சோ்ந்த 15 வயது சிறுவன் ஆதிதேவ் அண்மையில் உயிரிழந்தாா். பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு ‘1077’ என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story

