கோவை: சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு !
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இது முதல்முறையாகும். சிறுவாணி அடிவாரப் பகுதியில் 86 மி.மீ மழையும், அணைகட்டு பகுதியில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, நேற்று 26.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று 30.24 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 12 அடிக்கும் மேல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மே 23 அன்று 17.91 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 30.24 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 44.61 அடியாக இருக்கும் நிலையில், மழை தொடர்ந்து பெய்தால் அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவாணி அணை நீர், கோவை மாநகராட்சியின் 22 வார்டுகள் மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. தற்போது தினமும் 63.72 எம்.எல்.டி. நீர் குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படுகிறது. அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கோவை மக்களின் குடிநீர் தேவை இனி வரும் நாட்களில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story



