கோவை: மழைநீரில் நாற்று நட்டு மக்கள் நூதனப் போராட்டம் !

X
கோவை சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் 30000க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர், தார் சாலை, மழைநீர் வடிகால், பேருந்து நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்திய தொடர் மழையால், பட்டணம் ஊராட்சிக்குட்பட்ட காவேரி நகர், ரங்கா நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இதனால் வாகனங்கள் சிக்கிக்கொள்வதுடன், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தார் சாலைகள் இல்லாததே மழைநீர் தேங்கிக் கிடப்பதற்கு முக்கியக் காரணம் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் தேங்கிக் கிடந்த மழைநீரில் நாற்று நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தார் சாலை அமைத்து, மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டினால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.
Next Story

