ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு

X
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த விழா இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. கோடை விழாவையொட்டி ஏற்காட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்து சென்றுள்ளனர். இதனிடையே ஏற்காட்டில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் 7 அடி தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் வாகனம் ஏதும் செல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை 9-வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள சுற்றுச்சுவர் இடிந்து 7-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள் சுற்றுச்சுவர் இடிந்த இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து மண் சரிந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் குப்பனூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
Next Story

