சீரமைப்பு பணி நடந்த சாலையில் குட்டைபோல மழைநீர் தேக்கம்

X
காஞ்சிபுரத்தில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த திருச்சக்கரபுரம் தெருவில், கடந்த ஆண்டு பெய்த மழைக்கு, ஜல்லி கற்கள் பெயர்ந்து, 50 மீட்டர் நீளத்திற்கு ஆங்காங்கே சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், திருச்சக்கரபுரம் தெருவில், சேதமடைந்த சாலை, ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்கப்பட்டது. முறையாக சீரமைப்பு பணி மேற்கொள்ளாதால், நேற்று முன்தினம் இரவு பெய்த லேசான மழைக்கே சாலையில் மழைநீர் குட்டைபோல தேங்கியுள்ளது. மேலும், நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால், தார் கலவை மற்றும் ஜல்லிகற்கள் பெயர்ந்து மீண்டும் சாலை சேதமடையும் சூழல் உள்ளது. எனவே, திருச்சக்கரபுரம் தெருவில், மழைநீர் தேங்காமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

