காமென்வெல்த் யோகாசன போட்டிகள் கும்மிடிப்பூண்டி மாணவர்கள் சாதனை
இந்தோனேஷியா நாட்டில் நடைபெற்ற காமென்வெல்த் யோகாசன போட்டியில், இந்திய அணியில் இடம் பெற்ற கும்மிடிப்பூண்டி மாணவர்கள், 11 தங்கம் வென்றனர். இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி தீவில், இம்மாதம், 24 மற்றும் 25ம் தேதிகளில், காமென்வெல்த் நாடுகள் அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன. காமென்வெல்த் யோகாசன விளையாட்டு சம்மேளனம் நடத்திய போட்டியில், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உட்பட, 12 நாடுகளில், இருந்து 250 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்திய அணி சார்பில், 32 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்திய அணியில், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா மைய மாணவர்கள், 11 பேர், பயிற்சியாளர் சந்தியா தலைமையில் இடம் பெற்றிருந்தனர். வயது வாரியாக பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி மாணவர்கள், 11 பேரும், அவரவர் பிரிவில் தங்கம் வென்று முதல் இடங்களை பிடித்தனர். காமென்வெல்த் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் நேற்று நாடு திரும்பிய நிலையில், கும்மிடிப்பூண்டியில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவகுமார், அனைவருக்கும் மாலை அணிவித்து வரவேற்றார். பேண்டு வாத்தியம் முழுங்க, பகுதிவாசிகள் சார்பில், மாணவர்கள் அனைவரும், பஜார் வீதி வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று உற்சாகப்படுத்தினர். பின்னர் யோகா மையத்தில் நடந்த பாராட்டு விழாவில், ஏராளமானோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.
Next Story








