பாதாள சாக்கடை அமைக்க கூடாது என கோரிக்கை மனு
சென்னை அருகே திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி பகுதியில் பூந்தமல்லி, மாங்காடு, திருவேற்காடு ஆகிய மூன்று நகராட்சிகளில் ரூ.990.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள பாதாள சாக்கடை மூலம் வெளியேறும் கழிவுநீர், திருவேற்காடு கோலடி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள கழிவுநீர் நீரூற்று சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு கூவம் ஆறு மற்றும் அயனம்பாக்கம் ஏரியில் கொண்டு விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கோலடி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நீரூற்று நிலையம் அமைக்க கூடாது. இந்த பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் கோலடி ஏரி, அயனம்பாக்கம் ஏரி கடுமையாக பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசும். மேலும் கோலடியில் உள்ள மைதானத்தில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் விளையாட்டு பயிற்சி எடுத்து இருக்கிறார்கள். மேலும் அதன் அருகிலேயே அரசு பள்ளிக்கூடம், தேவாலயம் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதனால் கோலடி விளையாட்டு மைதானத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ நேற்று கோலடி விளையாட்டு மைதானத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார் பின்னர் அங்கு கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்களிடம் அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஜெகன்மூர்த்தி அளித்த பேட்டியின் போது கூறியதாவது: திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி விளையாட்டு மைதானத்தை காலங்காலமாக அப்பகுதி இளைஞர்களும், மாணவர்களும், விளையாட்டு வீரர்களும் பயன்படுத்தி வருகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில் கோலடி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைவதற்கு பதிலாக மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தால் இந்த பகுதியில் உள்ள கோலடி ஏரியில் நிலத்தடி நீர் மாசு அடைவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு அரசாங்கத்திற்கு தலைவலியாக தான் இருக்கும். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இந்த பகுதியில் அமைக்க வேண்டாம். வேறு ஒரு இடத்தில் மாற்றித் தர வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகவும் எண்ணமாகவும் உள்ளது. அதையேதான் நாங்களும் வலியுறுத்துகிறோம். விளையாட்டு திடல் போக எஞ்சி உள்ள இடத்தில் சமுதாய நலக்கூடமும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் அமைப்பதை இந்த பகுதி மக்களும் நாங்களும் எதிர்க்கிறோம் என்றார். இதனைத் தொடர்ந்து திருவேற்காடு நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற ஜெகன்மூர்த்தி, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கைவிட்டு வேறு பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story




