ஓமலூர் அருகே கூண்டில் சிக்கிய மரநாய்

ஓமலூர் அருகே கூண்டில் சிக்கிய மரநாய்
X
வனத்துறையிடம் ஒப்படைப்பு
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேல்காமாண்டபட்டி பகுதியை சேர்ந்தவர் யோகானந்தம், கோவில் பூசாரி. இவர் தனது விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியவகை மரநாய் ஒன்று அந்த பகுதியில் தென்பட்டது. மேலும் அந்த மரநாய் யோகானந்தத்தின் வீட்டிற்குள் நுழைய முற்படவே அவரது குழந்தைகள் பயந்து சத்தம் போட்டு உள்ளனர். இதனால், யோகானந்தம் மரநாயை விரட்ட முயற்சித்தும் அது பலனளிக்காமல் போகவே எலி பிடிக்கும் கூண்டை வீட்டு வாசலில் வைத்துள்ளார். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இறுதியாக மரநாய் கூண்டில் புகுந்து சிக்கியது. இதனையறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆச்சரியத்துடன் வந்து மரநாயை பார்த்து சென்றனர். இதைத்தொடர்ந்து யோகானந்தம் டேனிஷ்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் மரநாயை மீட்டு வனப்பகுதியில் விட கொண்டு சென்றனர்.
Next Story