நாகை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் தலை நகங்கி பலி

மேலும் 2 இளைஞர்கள் பலி- பெண், குழந்தை படுகாயம்
நாகை ஜெகநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஆனந்தராஜ் (24). திமுக நிர்வாகி. இவரது வீட்டிற்கு ஆனந்தராஜின் உறவினர் கார்த்தி (33) என்பவர் சென்னையிலிருந்து வந்திருந்தார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் ஜெகநாதபுரத்திலிருந்து திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதேபோல், நாகையை அடுத்த கூத்தூர் வண்ணான்குளத்தை சேர்ந்தவர் ராசப்பன். இவரது மகன் வினோத் பாபு (27). இவர் தன் மனைவி சிந்துபைரவி (23) மற்றும் குழந்தையுடன் கூத்தூரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் நாகை நோக்கி வந்து கொண்டிருந்தார். இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நாகை - திருவாரூர் சாலையில், ஆழியூர் பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாரூர் நோக்கி சென்ற ஒரு லாரியை ஆனந்தராஜ் முந்தி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்தராஜ் மோட்டார் சைக்கிளுடன் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, லாரியின் சக்கரத்தில் சிக்கி, கார்த்தி தலை நகங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஆனந்தராஜின் மோட்டார் சைக்கிள், வினோத் பாபுவின் மேரட்டார் சைக்கிள் மீது மோதியதில், வினோத் பாபு படுகாயமடைந்து அதே இடத்தில் இறந்தார். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சிந்துபைரவி, அவரது குழந்தை, ஆனந்தராஜ் ஆகியோரை சிகிச்சைக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆனந்தராஜ் பரிதாபமாக இறந்தார். சிந்துபைரவி, அவரது குழந்தை 2 பேரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து, நாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் வேதாரண்யம் அடுத்த நடுக்காடு கைலவன்பேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே விபத்தில் 3 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story