அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், கண்டக்டரின் பதவி உயர்வுக்கு லஞ்சம் கேட்டதாக புகார்

X
கும்பகோணம் கோட்டம் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருபவர் பொன்முடி. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கண்டக்டர் வனஜா முனியன். லஞ்ச புகாரின் விசாரணை முடியும் வரை, பொன்முடியின், ஓய்வு பலன்களை வழங்கப்படக் கூடாது எனக்கோரி வனஜா முனியன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சு.பாலாமுகி மூலம் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், மனுதாரரின் பதவி உயர்விற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி பொன்முடி, ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொன்முடி நாளை (31-ம் தேதி) ஓய்வு பெற உள்ளதால், அவர் மீது விசாரணை நடைபெறுவதற்குள் ஓய்வு பலன்களை வழங்க கூடாது எனக் கோரி மனுதாரர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பொன்முடி ஒரு வாரத்திற்குள் ஆஜராகி பதிலளிக்க, பொன்முடிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story

