நாகை அருகே கருவேலக்காட்டில் பராமரிப்பு இன்றி கிடக்கும் புத்தர் சிலை
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தழையாமலை ஊராட்சி கீராந்தியில், சுமார் நூறு ஆண்டு பழமை வாய்ந்த ஒரு புத்தர் சிலை, அங்குள்ள கருவேல காட்டில், புத்தர் சிலை போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவில்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். முகப்பகுதி சிதைந்த நிலையில், சுமார் 4 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை இருப்பது தெரியவந்தது. அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்க வேண்டிய புத்தர் சிலை என வருவாய் துறையினர் கூறினர். புத்தர் சிலையை இங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முற்பட்டனர். அதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன் தலைமையில், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்குள்ள புத்தர் சிலையை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடாது எனவும், தாங்களே புத்தர் சிலையை வைத்து வழிபடுகிறோம் எனக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சிலையை அப்புறப்படுத்துவதற்காக ஜேசிபி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகளை வழிமறித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிராம மக்களின் எதிர்ப்பை அடுத்து வருவாய்த் துறை மற்றும் போலீஸார் சிலையை எடுக்காமல் சென்று விட்டனர்.
Next Story




