ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான வாலிபர் மீண்டும் கைது.

ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான வாலிபர் மீண்டும் கைது.
X
வேலூர் அருகே ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான வாலிபரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்.மே.30: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மணிகண்டன் (27). இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் ஜேடர்பாளையம் அருகே உள்ள  சோழசிராமணி பகுதியில் ஒரு மளிகை கடைக்கு சென்று தான் உணவு பாதுகாப்பு அதிகாரி என்றும் கடையை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார். மளிகை கடையில் சோதனை செய்வது போல் சோதனை செய்துவிட்டு அங்கு இருந்த பீரோவை சோதனை செய்தபோது பீரோவில் இருந்த நகையை கடை உரிமையாளருக்கு தெரியாமல் திருடி சென்று விட்டார்.    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி கண்டுபிடித்து மணிகண்டனை கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். அதன் பிறகு மணிகண்டன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். ஜாமீனில் வெளிவந்த மணிகண்டன் வழக்கு சம்பந்தமான விசாரணை நடக்கும் போது நீதிமன்றத்திற்கு தொடர்ந்து வராமல் பல ஆண்டுகளாக இருந்து வந்தார். இதன் காரணமாக' அவருக்கு எதிரான கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் திருட்டு வழக்கு சம்பந்தமாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் பள்ளிபாளையம் பகுதியில் மறைந்திருப்பதாக  ஜேடர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தலைமறைவாக இருந்து பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை மீண்டும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் பரமத்தி குற்றியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் பரமத்தியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.  மணிகண்டன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story