நகைக்கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கி நிபத்தனையை திரும்ப பெற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கி நிபத்தனையை திரும்ப பெற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
X
குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.  கூட்டம் துவங்கியதும், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக் கடன் நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும். விவசாயிகள், ஏழைகளை வஞ்சிக்கும் செயலை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் எனக் கூறி, கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பிறகு, ஒன்றிய அரசையும், ரிசர்வ் வங்கியை கண்டித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று முழக்கமிட்டனர். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். வீரசேனன்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை,பேராவூரணி பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த தென்னை மரங்களில் 13 வகையான பூச்சித் தாக்குதலால் தென்னை மரங்கள் வீணாகி வருகிறது. இதில் அதிகப்படியான வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை தோட்டக்கலைத்துறை, தென்னை ஆராய்ச்சி நிலைய அறிவியல் ஆய்வாளர்களை கொண்டு கோட்ட அளவிலான கூட்டத்தை நடத்தி தென்னையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகராஜன்: தென்னையில் அதிகளவிலான பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பூச்சியல் ஆய்வாளர்களை கொண்டு ஆராய்ச்சியை நடத்த வேண்டும். இது தொடர்பாக வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய மையம் ஏற்படுத்த வேண்டும். கே.வி.கே., மையத்தையும், பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை தென்னை சாகுபடி குறைவான உள்ள ஈச்சங்கோட்டை வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைப்பதை மாற்றி, பேராவூரணி பகுதிகளில் அமைக்க வேண்டும்.  ஏ.கே.ரவிச்சந்தர்: பயிர் காப்பீடு பெறுகிற விவசாயிகள், அவர்களுக்கு வழங்கப்படும் தொகை பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் 291 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. முழு பணியும் முடிந்து விட்டதாக நீர்வளத் துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு மதிப்பீட்டுத் தொகையை வழங்கி விடுகிறார்கள். தண்ணீர் திறப்பதற்கு முன்பு எந்த அளவுக்கு வேலை நடந்துள்ளது என்பதை உரிய அளவீடு செய்து அதற்குரிய தொகையை மட்டுமே விடுவிக்க வேண்டும்.  துார்வாரும் பணியை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நகை கடனுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனே ரத்து செய்து, பழைய முறையில் நகைக் கடன் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக் கடன் மானியத்தை வழங்க வேண்டும். இளங்கோவன்:  விளைச்சலை தரும் நன்செய் நிலங்களை, தரிசுகளாக்கப்பட்டு மனைப் பரிவுகளாக மாற்றி விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் நிலை நீடித்தால் எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படும். விவசாய நிலங்களை சீரழித்து, உணவு உற்பத்தியை தடுத்தால் எதிர்காலத்தில் மிகப்பெரிய உணவுத் தட்டுப்பாடு தஞ்சைக்கு வந்துவிடும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: 2,000 ஆண்டுகளுக்கு பழமையான கல்லணைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கல்லணை அருகே 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலடி பகுதியில் மணல் எடுக்க அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றனர். இது விவசாயிகளுக்கு அரசு செய்யும் பெரிய துரோகம் ஆகும். எனவே கோவிலடி பகுதியில் மணல் எடுக்க அனுமதி வழங்கியதை ஆட்சியர் தலையிட்டு தடுக்க வேண்டும். முகமது இப்ராகிம்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முழுமையாக தூர்வாரும் பணி நடைபெறாமல் உள்ளது. எனவே தூர்வரும் பணிகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பாபநாசம் வட்டத்தில் பண்டாரவடை, ராஜகிரி, நெடுந்தெரு, விழுதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 25 ஏக்கருக்கு மேற்பட்ட இடங்களில் சாகுபடி செய்துள்ள நெல், பருத்தி, வாழை, வெற்றிலை, எள் உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் நாசம் செய்து வருகிறது. அதனை வனத்துறை மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜமாபந்தியில் பெற்ற மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. இந்தாண்டு ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களையும் சேர்ந்து விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். வெ.ஜீவகுமார்: ரிசர்வ் வங்கி நகை கடன் குறித்து அறிவித்துள்ள நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும். அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு மூலம் நகை கடன் கொடுப்பதில் ரிசர்வ் வங்கி நிபந்தனையை பின்பற்றப்படாது. எப்போது போல் வழங்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறியதற்கு விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே அதனை உடனே வழங்க வேண்டும். கச்சமங்கலம் அணை மிகவும் பழமை வாய்ந்த அணையாகும். எனவே அந்த அணையில் பணிகளை மேற்கொண்டு அதனை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். பூதலூர் ஒன்றியத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும்.
Next Story