மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
தஞ்சாவூர் மாவட்டம், கணபதி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் மகன் மணிகண்டன் (47),. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு அகிலாண்டேஸ்வரி என்ற மனைவியும், அபிஷேக், அபிநாத் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், திருவையாறு அருகே செம்மங்குடியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக, மணிகண்டன் கடந்த மே 21ஆம் தேதி சென்று விட்டார். பிறகு 22 ஆம் தேதி இரவு மணிகண்டன் பணியை முடித்து விட்டு, தனது தம்பி மகள் தன்ஷிகாவை அழைத்துக்கொண்டு செம்மங்குடிக்கு சென்றுள்ளார். அப்போது, மாதா கோவில் தெருவில் திருவிழாவுக்காக, முருசேகன் மனைவி ஜெனித்தாமேரி வீட்டின் வாசல் முன்பு கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். இரவு நேரம் என்பதால், எதிர்பாராத விதமாக, ஜெனித்தாமேரி மீது டூ வீலரில் சென்ற மணிகண்டன் மோதினார். இதில், ஜெனித்தாமேரி சிறிய காயமடைந்தார். இந்த சம்பவத்தில் அங்கிருந்த ஐந்து பேர், மணிகண்டனை பிடித்து தாக்கி, தலையை சாலையில் மோதியதில் மணிகண்டன் படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு, தன்ஷிகா உதவியுடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து திருவையாறு காவல்துறையினர் கடந்த 27 ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, மணிகண்டனை தாக்கியவர்கள் மீது புகார் அளித்து ஒருவாரமாகியும் கைது செய்யாத திருவையாறு காவல்துறையினரைக் கண்டித்து, மணிகண்டன் மனைவி அகிலாண்டேஸ்வரி அவரது உறவினர்கள் சனிக்கிழமை திருவையாறு கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை மணிகண்டனை உடலை வாங்க மாட்டோம் என முழக்கமிட்டனர். இது குறித்து தகவலறிந்த திருவையாறு காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாக வழக்கு விசாரணை நடத்தி, மணிகண்டன் மரணத்திற்கு காரணமான நபர்களை கைது செய்வோம் என உறுதியளித்தின் பேரில், சாலை மறியலை கைவிட்டனர். இதனால், திருவையாறு – தஞ்சாவூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story



