நாகை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டு - குடிநீர் குழாய்களில் காற்று வரும் அவலம்
நாகை மாவட்டம் நாகை, திருமருகல், கீழ்வேளுர், திருக்குவளை, வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட அனைத்து துணை மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் அனைத்து கிராம பகுதிகளிலும், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக திடீர் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், வேதாரண்யம் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் மின்வெட்டு ஏற்படுவதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காலை நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு கிளம்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் நாள்தோறும் காலை நேரத்திலேயே பதற்றமும், மனவேதனையும் அடையும் நிலை ஏற்படுகிறது. இந்நிலை நீடித்தால், குழந்தைகளுக்கு பள்ளி திறக்கும் நாளில் பெற்றோரின் துன்பம் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மின்வெட்டு காரணமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீரும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வரவில்லை. இதனால், ஆண்கள் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் தண்ணீர் தேடி அலைய வேண்டி உள்ளது. காலை நேரத்தில் மின்வெட்டும், தண்ணீர் பிரச்சினையும் இருப்பதால் பல வீடுகளில் காலை நேரங்களில் போர்க்களமாகவே காட்சி தருகின்றன. இதனால், கணவன், மனைவி உறவு பாதிக்கப்படுகிறது. குழந்தைகளின் நிலை பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மின்வெட்டு ஏற்படாமல் மின்விநியோகத்தை சீராக்கவும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் தங்குத் தடையின்றி கிடைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story





