கருங்கன்னி அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி

சப்பரத்தில் 7 சொரூபங்கள் எழுந்தருளி வீதியுலா
நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கன்னியில், பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருத்தேர் பவனி நேற்று முன் தினம் இரவு நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மிக்கேல், அருளானந்தர், சவேரியார், கன்னி மரியாள், சூசையப்பர், மாதா, அந்தோணியார் ஆகிய 7 சொரூபங்கள் எழுந்தருளினர். முன்னதாக, முன்னாள் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் மற்றும் ஆலய பங்குத் தந்தை டேவிட் செல்வகுமார் தலைமையில், சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. ஆலய வளாகத்திலிருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தேர் பவனியை முன்னிட்டு, வண்ணமிகு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், ஜாதி மத பேதம் இன்றி சுட சுட 2 ஆயிரம் பேருக்கு விடிய விடிய சாப்பாடு, மட்டன் குழம்பு, சிக்கன் கிரேவி, ,ஆனியன், ரசம் உள்ளிட்டவைகளை பந்தி பரிமாறி அசத்தினர். இதில், சுற்று வட்டாரத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து மத மற்றும் சமுதாய மக்களும் மத நல்லிணக்க முறையில் அன்னதான விழாவில் கலந்து கொண்டு சாப்பிட்டு சென்றனர்.
Next Story