சுதந்திரா இயக்கம் சார்பில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி கையெழுத்து இயக்கம்

சுதந்திரா இயக்கம் சார்பில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி கையெழுத்து இயக்கம்
X
மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
சுதந்திரா இயக்கம் சார்பில் திருக்குறள் மாநில மாநாடு சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சுதந்திரா இயக்க நிறுவன தலைவர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சி.வேலுமணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். விழாவில் வீணை, பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பேண்டு இசை, தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இமயம் தொட்ட ஈரடி பயணம் தபால் அட்டை கண்காட்சி நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாணவ- மாணவிகள் திருக்குறள் எழுதிய 25 லட்சம் தபால் அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இதனை ஏராளமானவர்கள் கண்டு பயன் அடைந்தனர். விழாவில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள், கிராமிய கலைஞர்களுக்கு நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவில் சாரட் வண்டியில் அரசர் வருவது போன்றும், அவரிடம் கந்தப்பன், எல்லீஸ்துரை, பாரதியார், பாரதிதாசன் வேடம் அணிந்த மாணவர்கள் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக்கோரி மனு கொடுக்கும் நிகழ்ச்சி நாடகமாக நடத்தி காண்பிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சுதந்திரா இயக்க நிர்வாகிகள் சுரேஷ்குமார், அருண் பிரசாத், செந்தமிழ்தேனீ, கர்ணராஜா, மீனா, பிரியதாரணி, ரேவதி ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story