குறுவை விதை நெல் தனியார் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை

குறுவை விதை நெல் தனியார் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை
X
தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டுக்குடி கிளை மாநாட்டில் தீர்மானம்
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டுக்குடி கிளை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு, எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி.செல்வம் மாநாட்டினை தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டின் வேலை அறிக்கையினை கிளை செயலாளர் வீ.எஸ்.மாசேத்துங் முன்மொழிந்து பேசினார். கிளை துணை செயலாளர் கே.ஜெயராமன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சங்கர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ரமேஷ், மாதர் சங்கத்தின் பொறுப்பாளர் ஜெயசித்ரா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருக்குவளை தாலுகா எட்டுக்குடியில் பிரசித்தி பெற்று ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. விசேஷ நாட்கள் மட்டுமின்றி நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, எட்டுக்குடியை சுற்றுலாத்தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான அடிப்படை வசதிகளை செய்து தர, சிறப்பு நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். குறுவை சாகுபடியை தொடங்குவதற்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு ஆறு, வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கான விதை நெல் கையிருப்பு இல்லை‌. விவசாயிகள் குறுவை சாகுபடியில் இந்தாண்டு அதிக அளவில் ஈடுபட உள்ளனர். ஆகவே, குறுவை சாகுடிக்கான விதை நெல் தட்டுப்பாடின்றி மானிய விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாகவும், வேளாண்மை துறை மூலமாகவும் விவசாயிகளுக்கு மானிய விலையில் குறுவை விதை நெல் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதோடு, தனியார் கடைகளில் அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.
Next Story