செங்கல் தொழிலகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவரும்படி அரசுக்கு வேண்டுகோள்
திருவள்ளூரில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட செங்கல் தொழிலகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவள்ளூரில் உள்ள பல்வேறு செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக இருந்து 28 பழங்குடியினர் குடும்பங்களை அரசு மீட்டது அவர்களை தொழிலாளர்களாக மீட்டெடுத்து அவர்களை முதலாளிகளாக உருவாக்கும் வகையில் முதலமைச்சரின் கனவு திட்டமான விடியல் திட்டத்தின் கீழ் 4.05 லட்சம் நிதியில் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செங்கல் தொழிலகத்தை அமைத்தது. அத்தகைய சூளையில் 50 ஆயிரம் செங்கற்களை அறுத்து விற்பனை செய்தனர். தனியார் தொண்டு நிறுவனம் செங்கற்களை விற்பனை செய்தது ஆனால், லாபத்தொகையை அவர்களுக்கு தராமல் ஏமாற்றி தினக்கூலி அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் அளித்துள்ளனர். தொடக்கத்தில் இரண்டு மாதம் அரசு திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் திட்டம் செயல்படுத்த போதிய நிதி இல்லாமலும் செங்கல் அறுக்க மண் மற்றும் மணல் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. திட்டத்திற்கு நிதி கிடைக்காமல் அதிகாரிகள் திட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டனர். இதனால் அத்திட்டத்தை செயல்படுத்த கோரியும் லாபத்தொகை அளிக்க கோரியும் அம்மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். சூளை செயல்படாமல் மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் அம்மக்கள் மாற்று வேலையைத் தேடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டனர்.அப் பகுதியில் செங்கல் அறுப்பதற்காக கொட்டப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் அதனால் வீணாகி வருகிறது. அருகில் இருந்த ஏரி குளங்கள் ஆறுகள் தொடர்ந்து பெய்த மழையால் நிரம்பிப் போனதால் மண் எடுக்க முடியாமல் திட்டம் கிடப்பில் போனதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். முதலாளிகளாக மாற்ற பழங்குடியினருக்கு உதவிய அரசு அதை முறையாக கண்காணிக்காததால் முதலமைச்சரின் கனவுத் திட்டமான விடியல் திட்டம் பழங்குடியினருக்கு அவர்களது வாழ்வில் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாலும் செங்கற்களை விற்ற தொண்டு நிறுவனமும் ஏமாற்றியதால் இருளர் பழங்குடியின மக்களுக்கு விடியலை தராததால் அவர்களது வாழ்வு இருளிலேயே கிடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள துறை சார்ந்த அதிகாரிகளும் இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்..
Next Story







