குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்ற மேயர்

X
ஜூன் 2ஆம் தேதி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு பள்ளிகள் தயார் செய்யப்பட்டது. அதன்படி திண்டுக்கல், மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் திங்கட்கிழமை காலை 9 மணியளவில் புதிதாக சேர்ந்துள்ள பள்ளி குழந்தைகள் 30க்கு மேற்பட்டோருக்கு திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் பள்ளிக்கு வரவேற்றார். அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பெற்றோர்கள் சந்தோஷத்துடன் வந்து விட்டு சென்று வருகின்றனர். மேலும், பள்ளிக் கல்வித் துறை உத்தரவின்படி இந்த வருடம் முதல் உடற்கல்வி ஆசிரியர்கள் 30 நிமிடத்திற்கு முன்பு வருகை தந்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகை மற்றும் உடைமைகளை சரி பார்க்கவும், உடற்பயிற்சிக்கு என வாரத்தில் 2 வகுப்புகள், வாரம் ஒரு நாள் கூட்டு உடற்பயிற்சியும், மாணவர்களின் மனநிலையை மேம்படுத்த வாரத்திற்கு ஒரு நாள் வகுப்பு ஆசிரியர் "நன்னெறி வகுப்பு" நடத்தவும், நூலக பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக வாரம் ஒரு முறை நூலக வகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

