மணல் திட்டுகளால் சிறு மழைக்கே நிரம்பி வழியும் பழையசீவரம் தடுப்பணை

X
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் பாலாற்றில், 2020ல், 42 கோடி ரூபாய் செலவில் நீர்வளத் துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் வலது மற்றும் இடது புறங்களில், மதகுடன் துணை பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்கால்வாய் வாயிலாக தடுப்பணையில் தண்ணீர் நிரம்பினால், பினாயூர், அரும்புலியூர், உள்ளாவூர், பாலூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில், சில ஆண்டுகளாக மணல் துார்ந்து பள்ளமான ஆழ பகுதிகள் மூடப்பட்டு அணை உயரத்திற்கு மணல் தேங்கி உள்ளது. இதனால், பருவ மழை காலம் மட்டுமின்றி சாதாரண மழைக்கும், ஆற்றில் நீர் வரத்து இல்லாமலே, இத்தடுப்பணை நிரம்பி விடுகிறது. ஆறு அடி உயரத்திற்கு கட்டப்பட்ட பழையசீவரம் பாலாற்று தடுப்பணை, தற்போது ஒரு அடி உயரம் ஆழம் கூட இல்லாமல், மணல் மூடி உள்ளதால் சிறு மழைக்கே அணை நிரம்பி, அடுத்த ஒரு சில தினங்களில் தண்ணீர் வற்றி போகிறது. எனவே, வரும் பருவமழை காலத்திற்குள், பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில், அணை உயர்த்திற்கு குவிந்துள்ள மணலை துார்வாரி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாலாற்று பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

