பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

X
பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் அஸ்விதா (19), கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், இன்று அவரது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல், அஸ்விதாவின் பெற்றோர்கள் இன்று பணிக்குச் சென்றிருந்தனர். தனியாக வீட்டில் இருந்த அஸ்விதா, உடலில் பல கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அக்கம் பக்கத்தினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அஸ்விதாவை மீட்டு பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அஸ்விதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்தும், இச்சம்பவம் கொலை தானா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

