பேராவூரணி அரசுப்பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கல்

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கரிசவயல் அரசு மேல்நிலைப்பள்ளி, குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில், திங்கள்கிழமை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொடர்ந்து, கரிசவயல் பள்ளியில் 10,11,12 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கும், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 4 மாணவிகளுக்கும், தலா ரூ.1000 வீதம் என ரூ.13 ஆயிரத்தை தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கி வாழ்த்திப் பேசினார். மேலும், 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார் நிகழ்வுகளில், கல்விப்புரவலர்கள் க.அன்பழகன், சுப.சேகர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் திருமுடிச் செல்வன் (கரிசவயல்), மகேஸ்வரி (குருவிக்கரம்பை), காளீஸ்வரி (பேராவூரணி), பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story

