சாரட் வண்டியில் அரசு பள்ளிக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள்

X
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிகளிலும், ஒவ்வொரு விதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். குறிப்பாக, கிராமப்புற அரசுப்பள்ளியில் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கிராமத்தினர் மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் விதமாகவும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் புதிது புதிதாக திட்டங்களையும், பள்ளி திறந்தவுடன் மாணவர்களை வரவேற்பு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வேலாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திங்கள்கிழமை புதிதாக பள்ளியில் சேர்ந்த 22 மாணவர்களை, சாரட் வண்டியில் கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து பள்ளிக்கு டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர். பள்ளியில் ஏற்கனவே உள்ள பழைய மாணவர்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர். இதில், பள்ளி தலைமையாசிரியர் சங்கரபாண்டியன், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள் பாண்டிமீனா, கனிமொழி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குருசாமி கருப்பையா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சந்திரா, துணைத்தலைவர் செல்வகுமாரி, இல்லம்தேடிக்கல்வி தன்னார்வலர் கிருஷ்ணவேணி, பெற்றோர்கள், கிராமமக்கள் கலந்துக்கொண்டனர். இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் சங்கரபாண்டியன் கூறியதாவது: கடந்த ஆண்டு 72 மாணவர்கள் படித்தனர். இதில் ஐந்தாம் வகுப்பு முடித்து 18 மாணவர்கள் சென்று விட்டனர். தற்போது மாண்வர்களின் எண்ணிக்கையை பள்ளியில் அதிகரிக்க வேண்டும் என பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன் பயனாக 22 மாணவர்கள் இந்தாண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டது, மாணவர்களுக்கு புதியதாக இருந்ததால் உற்சாகமாய் பள்ளிக்கு வந்தனர்" இவ்வாறு அவர் கூறினார். பேராவூரணி வடகிழக்கு பள்ளி இதே போல், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்த 24 மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஹாஜாமுகைதீன் தலைமையில், ராஜா, ராணி போல் தலையில் கிரீடம் அணிவித்து வரவேற்கப்பட்டனர். புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக் குமார் நேரில் சென்று வாழ்த்தினார். அப்போது, கல்விப்புரவலர்கள் க.அன்பழகன், சுப.சேகர், ஆசிரியர்கள் ரேணுகா தேவி, சுபா, பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர்கள் நித்யா, மலர்விழி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நித்யா மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

