சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 

அமைச்சர் ஆய்வு
தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்தை பெற்ற தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.  இந்த நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழ்நாட்டின் கலாசாரத்தை இதுபோன்ற நூலகங்களில் கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்து பெற்ற இந்த நூலகத்தில் மழை நீர் கசிவுகள் இருக்கக்கூடாது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இதற்காக அருகிலேயே புதிதாகக் கட்டடம் கட்டி, சில தளவாடப் பொருட்களை அங்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு தேவையான நிதி, கருத்துருக்களை ஆட்சியர் கொடுத்துள்ளார்.  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றாலும், மேலும் தேவைகள் இருப்பதாக ஆட்சியர் தெரிவித்ததையும் அறிக்கையாகப் பெற்றுள்ளோம். இவற்றைத் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இந்த நூலகத்தில் மாநில அரசு ஒரு தொகையும், ஒன்றிய அரசு ஒரு தொகையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு அவ்வப்போது நிறுத்தியிருந்தாலும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதியம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை.  இந்த நூலகத்தில் தற்போது போதுமான பணியாளர்கள் உள்ளனர். இன்னும் கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான அறிக்கையும் பெற்றுள்ளோம். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தமிழக முதல்வர் கூறியபடி வழக்குத் தொடுப்பதற்கான பணி நடைபெறுகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்குகிறது. பள்ளிக்கூடம் தொடங்கு நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், பை உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.   ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது, 'காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பது போன்ற கருத்தாகத்தான் பார்க்கிறேன்" என்றார் அமைச்சர். அப்போது, மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் எஸ். மார்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story