திருவாய்மூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா

திருவாய்மூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா
X
வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடத்தை யாகசாலையில் வைத்து பூஜை
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில், இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றான மற்றும் அஷ்ட மகா பைரவர்கள் ஒரே நேர் கோட்டில் அமையப்பெற்ற  இக்கோயிலில், 20 வருடங்களுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, கடந்த 2020 -ம் ஆண்டு கும்பாபிஷேக புனரமைப்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு, 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. மூலவர், ராஜகோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள், கோபுரங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 8000 சதுர அடி பரப்பில் 32 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த மே மாதம் 30-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. நேற்று (2-ம் தேதி) முதல் கால யாகபூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடத்தை யாகசாலையில் வைத்து பூஜித்து வருகின்றனர். தொடர்ந்து, ஐந்தாம் கால யாக பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா வருகிற 5-ம் தேதி காலை 7.45 மணிக்கு கடம் புறப்பாடுடன் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, இந்து சமய அறநிலைத்துறை  மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Next Story