சென்னையில் ஒரு நாள்" திரைப்பட பாணியில் தேனியில் இருந்து மதுரைக்கு கல்லீரலை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்...

X
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா ஆத்தங்கரை பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி நிருவி தலையில் ரத்தக்குழாய் வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைச் சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். இதனையடுத்து நிருவியின் உடலில் இருந்து கல்லீரல் சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளை மதுரை திருச்சி ஆகிய நகரங்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக கல்லீரல் மதுரை நகரில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கல்லீரல் உரிய பாதுகாப்புடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை மாநகருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. உடல் உறுப்பு மதுரை மாநகருக்கு செல்வது குறித்து போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதால் ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய நகர் பகுதிகளில் போக்குவரத்துகளை சீரமைக்க அந்தந்த மாவட்ட காவல்துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கல்லீரல் எடுத்துக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் மதுரைக்கு பறந்தது. ஆம்புலன்ஸ்க்கு முன்பாக போலீஸ் வாகனம் சைரன் சத்தத்துடன் சென்றது. சென்னையில் ஒரு நாள் என்ற திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல ஆண்டிப்பட்டி நகரில் பொதுமக்களின் வாகனங்கள் ஓரமாக நிறுத்தப்பட்டு ஆம்புலன்சுக்கு வழி விடப்பட்டது. போலீசாரின் முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக எவ்வித தடையும் இன்றி சுமார் 45 நிமிடங்களில் தேனியில் இருந்து மதுரைக்கு கல்லீரல் கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

