அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர், நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அரசு பணி ஓய்வு

அரசு ஊழியர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்- பணி பாராட்டு விழா
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர், நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் கடந்த மே மாதம் 31-ம் தேதி அன்று அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதையடுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நேற்று நாகை சங்க கட்டடத்தில், கருத்தரங்கம் மற்றும் பணி பாராட்டு விழா நடைபெற்றது. காலையில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு. மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் வரவேற்றார். சங்க பணிகள் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் முன்னாள் மாநில துணைத் தலைவர் சு.சிவகுமார், மாநில பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், முன்னாள் மாநிலத் தலைவர் மு.அன்பரசு ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார். மாலையில் நடைபெற்ற ஏ.டி.அன்பழகன் பாராட்டு விழாவிற்கு, மாவட்ட பொருளாளர் ப.அந்துவன் சேரல் தலைமை வகித்தார். நாகை வட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ வி.மாரிமுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், மாநிலப் பொருளாளர் சா.டானியல் ஜெயசிங், முன்னாள் மாநில நிர்வாகிகள் கே.எம்.தியாகராஜன், சு.சிவகுமார், ஆர்.பன்னீர்செல்வம், எம்.சௌந்தர்ராஜன், தற்போதைய மாநில நிர்வாகிகள் வெ.சோமு, ஆ.ரங்கசாமி, பிரகாஷ், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் எம்.எஸ்.முருகேசன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வரலாற்று ஆவண நூல் 'தடம்' வெளியிட்டு, கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ வி.பி.நாகை மாலி, சிறப்புரையாற்றினார். ஏ.டி.அன்பழகன், ஏற்புரை வழங்கினார்.
Next Story