கோடிமுனை கடற்கரையை கலெக்டர் ஆய்வு

X
மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கூறியதாவது:– கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடந்த மே 25-ம் தேதி எம்எஸ்சி எல்சா 3 என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர்கள் அரபிக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக மூழ்கியது. இந்த கப்பலில் சில பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக்துகள்கள் அடங்கிய மூட்டைகள், மரக்கட்டைகள், முந்திரி பருப்பு மூட்டைகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளில் கரை ஒதுக்கியதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுதலின்படி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறந்த வல்லுனர்களை கொண்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, கைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்கரை பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலில் நச்சுப்பொருட்கள் கலக்கப்படவில்லை என்பதை வல்லுனர்கள் உறுதி செய்துள்ளார்கள். தற்போது பேரிடர் மேலாண்மைத்துறை ஆப்த மித்ரா தன்னார்வலர்கள், ஊராட்சி அளவிலான அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாயிலாக கடற்கரை மணலில் கலந்துள்ள பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருப்பதோடு, கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ கிராம மக்களுக்கு தகுந்த விழிப்புணர்வுகள் பல்வேறு துறைகளின் மூலமாக வழங்கப்பட்டுவருகிறது. ஆகவே இதுகுறித்து அனைவரும் அச்சப்பட தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என கூறினார்.. நடைபெற்ற ஆய்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மீன்வளத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

