சேதுபாவாசத்திரம் விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வட்டாட்சியர் உறுதி !!! காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு....

X
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சியில், வெளிமடம் கிராமத்தில், நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கம் காரணமாக, வரத்து வாய்க்கால் மூடப்பட்டதால், ஆண்டிக்குளத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் வராமல் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி இல்லாமல் உள்ளது. எனவே, குளத்திற்கு தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். மரக்காவசை ஊராட்சி 4ஆவது வார்டில் வடிகால் வாய்க்காலில் சாக்கடை நீர் கலந்து சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதை சரி செய்ய வேண்டும். ஆடாளக்குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். காரங்குடா பேருந்து நிறுத்தம் அருகில் வாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரியும் விபத்துகளை ஏற்படுத்தும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும். மரக்காவலசை கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த வண்டிப்பாதையை மீட்டுத் தர வேண்டும். மரக்காவலசை புதுத்தெருவில் அமைந்துள்ள இரு குளங்களில், மழைக்காலங்களில் வடிகால் நீர் காட்டாறு போல் பாய்வதால் விவசாயப் பணிகளுக்கு செல்ல முடியவில்லை. எனவே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு சார்பில், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு (ஜூன்.3) செவ்வாய்க்கிழமை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் திரண்டனர். இந்நிலையில், பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க தலைவர்கள், நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பசுபதி முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், நிர்வாகிகள் கோ.ராமசாமி, பி.எஸ்.ருக்கூன், எஸ்.கமால் பாட்சா, வி.நீலகண்டன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், வரும் ஜூன்.6 வெள்ளிக்கிழமையன்று சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். இதையேற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தெரிவித்தார்.
Next Story

