அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் மீறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை

X
தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023 ம் ஆண்டு “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் சட்டப்படி அமைக்கப்படுவதை 100 சதவிதம் உறுதி செய்ய மாவட்ட குழு அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆய்வுகள் மேற்கோள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட மாவட்டகுழுவானது அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 09.04.2025 அன்று நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தில் 15.05.2025-க்குள் அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவிதம் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது. மாவட்டகுழுவின் இரண்டாவது கூட்டமானது 03.06.2025 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வைத்து நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் இரண்டு வாரத்திற்குள் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் சட்டப்படி அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இரண்டு வாரத்திற்குள் தமிழில் பெயர் பலகைகள் அமைக்காத நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து கடைகள் நிறுவனங்கள்,உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களும் “அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்திட வேண்டும்“ எனவும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது. தமிழில் பெயர் பலகைகள் வைத்தல் மற்றும் திருக்குறளை பொருள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தும் நிறுவனங்களுக்கு தமிழ் ஆர்வலர்கள் விருதினை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது. எனவே மேற்படி கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்வாறும் கீழ்க்கண்ட சட்டங்களை பின்பற்றியும் தமிழில் பெயர் பலகை அமைக்குமாறு அனைத்து கடைகள் நிறுவனங்கள்,உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவிதம் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அனைத்து கடைகள் உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்குமாறும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்க உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்தான விதிகள் கீழ்க்கண்டவாறு தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்து “தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள் விதி 15, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42B மற்றும் தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 ஆகியவற்றில் அனைத்து கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் “தமிழ் மொழியில் முதன்மையாகவும், பிரதானமாகவும் அமைக்க வேண்டும். பிற மொழிகளிலும் எழுத வேண்டும் எனில் தமிழ் மொழிக்கு கீழ் ஆங்கிலத்தில் இரண்டாவது இடத்திலும், இதர மொழிகளில் மூன்றாவது இடத்தில் அதற்கு கீழேயும் எழுதப்பட வேண்டும் என வரையறை “ செய்யப்பட்டுள்ளது. அரசாணை எண்.55 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நாள்.02.07.2024ன்படி தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதமானது ரூ.50-லிருந்து ரூ.2000- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Next Story

