அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் முருகப்பெருமான்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. வசந்த விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி தெய்வானை, சண்முகர் வள்ளி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வசந்த மண்டபத்தில் நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் பூக்கள் பரப்பப்பட்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அரை மணி நேரம் அங்கு சுவாமி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல வருகின்ற எட்டாம் தேதி வரை சுவாமி தினமும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத்தன்று சண்முகர் வள்ளி தெய்வானைக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் பால்குடமாக கொண்டு வரும் பால் கொண்டு காலை முதல் மதியம் வரை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 10ஆம் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும். அன்றைய தினம் அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி தியாகராஜர் பொறியியல் கல்லூரி அருகே உள்ள மொட்டை அரசு திடலில் எழுந்தருளுவார். காலை முதல் மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி இரவு பூ பல்லாக்கில் திருப்பரங்குன்றம் கோயிலை வந்து அடைவார்.
Next Story





