டிராவல்ஸ் உரிமையாளர் கொலை வழக்கு - ஆறு பேரிடம் போலீசார் விசாரணை !
துபாய் டிராவல்ஸ் உரிமையாளர் சிகாமணி கொலை வழக்கில், கைதான ஆறு பேரையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமானைச் சேர்ந்த சிகாமணி, துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கும் கோவையைச் சேர்ந்த சாரதா என்பவருக்கும் துபாயில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சிகாமணி சாரதாவிடம் 6 லட்சம் ரூபாய் வாங்கிய நிலையில், பணத் தகராறில் சாரதாவைத் தாக்கியுள்ளார். இதையடுத்து சாரதா கோவை திரும்பியுள்ளார். ஏப்ரல் 21 அன்று துபாயில் இருந்து கோவை வந்த சிகாமணி, சாரதாவைச் சந்தித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், சாரதா தனது உறவினர்கள் மற்றும் கூலிப்படை உதவியுடன், இறைச்சியில் அதிக அளவு தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து சிகாமணியைக் கொலை செய்து, உடலை கரூர் மாவட்டம் பரமத்தியில் உள்ள காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், சாரதா தனது தாயார் கோமதி, அக்கா நிலா, உறவினர் சுவாதி, கூலிப்படையைச் சேர்ந்த புதியவன், தாயாரின் கள்ளக்காதலன் தியாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது தெரியவந்தது. தியாகராஜன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், சாரதா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு மாற்றப்பட்டதால், சாரதா உட்பட ஆறு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, சாரதா, கோமதி, நிலா, சுவாதி, புதியவன் மற்றும் தியாகராஜன் ஆகிய ஆறு பேரையும் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, சரவணம்பட்டி போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, சாரதாவைத் தாக்கியதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை நடந்ததா, கூலிப்படையின் பங்கு என்ன, அதிக அளவு தூக்க மாத்திரையை எப்படி வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story



