ஊராட்சி சேவை மையத்தில் இயங்கும் ரேஷன் கடை

X
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள, ஊராட்சி சேவை மைய கட்டடத்தில், தற்காலிகமாக ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில், 240 குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் உணவு பொருட்கள் பெற்று வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாமல், ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதனால், ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கான பயிற்சி, கூட்டங்கள் நடத்த போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. மேலும், ஊராட்சி சேவை மைய கட்டட படிக்கட்டுகளில் ஏறி, ரேஷன் பொருட்கள் வாங்க, முதியவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ரேஷன் கடைக்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்ட, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: அருப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில், நான்கு ஆண்டுகளாக ரேஷன் கடை ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. அப்பகுதியில் ரேஷன் கடைக்கு புதிதாக கட்டடம் கட்ட, ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story

